100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உடல் பருமன் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது கவலையளிக்கிறது என தெரிவித்தார்.
மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும் என்றும், மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி எனவும் கூறினார்.
தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறைவு செய்துள்ளதாக கூறிய அவர், நமது நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.
உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை என குறிப்பிட்டார்.
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும், இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆதிவாசிகளின் நிலங்கள் சட்டவிரோதமாக கைப்பற்றப்படுவது தடுத்து நிறுத்தப்படும் எனக்கூறிய அவர்,இந்தியாவின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான பல்வேறு சதித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.
நாட்டின் முக்கிய இடங்களில் அந்நிய தாக்குதல்களை தடுக்க தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு கேடயம் அமைக்கப்படும் என்றும், ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க புதிய ஆயுத தடுப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம் எனக்கூறிய பிரதமர் மோடி, 90 நிமிட சுதந்திர தின உரையை நிறைவு செய்தார்.