நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா விமரிசையாக நடைபெற்றது. ஜார்ஜ் கோட்டைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். பின்னர், திறந்த வாகனத்தில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து ஜார்ஜ் கோட்டை முகப்பில் புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதலமைச்சர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, கொடிக்குள் வைக்கப்பட்டிருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.
சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர்.