தீபாவளி பண்டிகை பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
79வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த தீபாவளியில் நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள் என்றும்,
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளதாகவும் கூறினார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என்றும்,
அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
செமி கண்டக்டர் தொழில்நுட்பத்தில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி 30 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், அணுசக்தி உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்கள் வான்வழி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கு சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் சிறந்த உதாரணம் என்றும், ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் புதிய வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, நமது விவசாயிகளை சுவர்போல் இருந்து பாதுகாப்பேன் என்றும் உறுதியளித்தார்.