கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்த முக்கிய நிதி உறுதிமொழிகளை மீண்டும் நிறைவேற்றத் தவறிவிட்டது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் நாடுகளில் முதல் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.1989 முதல் 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் IMF-யிடம் அந்நாடு கடன்களைப் பெற்றுள்ளது.
மேலும், IMF-ன் திட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காமலும் செயல்படுத்தாமலும் மிக மோசமான நடந்துவருகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்களைப் பாகிஸ்தான் முறையாகக் கடைப் பிடித்திருந்தாலே, மீண்டும் மீண்டும் கடனுக்காக அந்நாடு கையேந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
பாகிஸ்தான் அரசு கொள்கைகளில், ராணுவத்தின் ஆழமான தலையீடு காரணமாகவே அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. IMF வழங்கும் கடன் நிதியை, எல்லை தாண்டிய பயங்கர வாதச் செயல்களுக்கே பாகிஸ்தான் பயன்படுத்திவருகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
வரும் செப்டம்பர் மாதத்தில், பாகிஸ்தானின் செயல்திறனை IMF மதிப்பாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டைப் பொறுத்து, அடுத்த கட்ட தவணையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைக்கும்.
பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நிதி செயல்பாட்டு அறிக்கையின்படி, IMF-ன் 5 முக்கிய நிபந்தனைகளில், 3-ஐ பாகிஸ்தான் அடையத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது மாகாண அரசுகள் 1.2 டிரில்லியன் ரூபாய் சேமிக்கும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் வெறும் 921 பில்லியன் ரூபாயை மட்டுமே பாகிஸ்தானால் சேமிக்க முடிந்தது. இதில் மட்டும் 280 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, IMF நிர்ணயித்த முக்கிய நிபந்தனையான 12.3 டிரில்லியன் ரூபாய் வருவாய் வசூல் என்ற இலக்கையும் பாகிஸ்தான் அடையத் தவறியுள்ளது. வரி அடிப்படையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியான தாஜிர் தோஸ்த் திட்டத்தின் கீழ் சிறு சில்லறை வணிகர்களிடமிருந்து 50 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கும் இலக்கையும் பாகிஸ்தான் முற்றிலுமாக நிறைவேற்றவில்லை.
இந்தச் சூழலில், நிதிப் பற்றாக்குறை மற்றும் முதன்மை உபரி வருவாயில் முன்னேற்றத்தைக் காட்டி IMF-ஐ நம்ப வைக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
ஏற்கெனவே சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம் தொடர்பான நிபந்தனைகளைப் பாகிஸ்தான் நிறைவேற்றத் தவறியதால், 500 மில்லியன் கடன் வழங்கும் திட்டத்தை உலக வங்கி ரத்து செய்துள்ளது.மேலும், புதியதாக உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், IMF-ன் கடனுதவியைப் பெறுவதிலும் பாகிஸ்தானுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.