குடிநீர் தொடங்கி சாலைவசதி வரை எந்தவித அடிப்படை வசதியுமில்லாத காரணத்தினால் திருச்சி அருகே கிராமம் ஒன்று மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. அந்த கிராமம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த பூலாங்குளத்துப்பட்டி கிராம். நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சாலை வசதி தொடங்கி, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் அன்றாடத் தேவைகளுக்கே அல்லல் பட வேண்டிய சூழலுக்கு இக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சாலை வசதிகள் இல்லாத கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முதன் முறையாகப் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத காரணத்தினால் எப்போது மழை பெய்தாலும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மாதத்திற்கு பத்து நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குடிநீரும் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சுவர் கூட இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமித்திருக்கும் விஷ ஜந்துகளால் குழந்தைகளை அம்மையத்திற்கு அனுப்பிவைக்கவே அச்சப்படுவதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
குடிநீர் தொடங்கி அங்கன்வாடி மையம் வரை எந்தவித அடிப்படை வசதியும் முறையாக இல்லாமல் காட்சியளிக்கும் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் மனிதர்கள் வாழவே தகுதியற்ற கிராமமாக மாறிவருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.