சுவாமிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதியை 4 ஆண்டுகளாகப் பூட்டியே வைத்திருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வைகாசி, கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகிறார்கள்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாததால், சாலை ஓரங்களிலும் கோயில் படி திட்டுகளிலும் தங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் படுத்து இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டியடித்த நிகழ்வு சர்ச்சையைக் கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னையைச் சேர்ந்த பி.எஸ் சுப்பிரமணியம் என்ற உபயதாரர் ஒருவர், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 16 அறைகளுடன் கூடிய விடுதியைச் சுவாமிமலைக்கு 2022ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தானமாக வழங்கினார்.
அறநிலையத்துறை அலட்சியத்தால் 4 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ள அந்த விடுதி கட்டிடம் தற்போது செடி, கொடிகள் மண்டி, மரங்கள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.