இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திருமிகு இல. கணேசன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய திருமிகு இல. கணேசன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; மணிப்பூர் மாநில ஆளுநர், மேற்கு வங்காள ஆளுநர் (கூடுதல்), மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
திருமிகு இல. கணேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என இபிஎஸ் கூறியுள்ளார்.