ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் இந்தாண்டு தீபாவளிக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றார். இதன் மூலம் பொருள்களின் விலை குறையும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அதாவது, தற்போதைய 5%, 12%, 18%, மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, பெரும்பாலான பொருட்கள் 5% அல்லது 18% வரி அடுக்குக்கு மாற்றப்படலாம்.
அத்தியாவசிய பொருட்களின் வரி குறைக்கப்பட்டு, சொகுசு பொருட்களுக்கு 40% என்ற சிறப்பு வரி விதிக்கப்படலாம்.
இந்த சீர்திருத்தங்கள் சிறு, குறு தொழில்கள், நடுத்தர வர்க்கம், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் எனவும், பொருட்களின் விலை குறைவதால் நுகர்வு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்க உள்ளது.