உலகில் மனித அழிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை வெறும் எலிகளை வைத்து நடத்திய ஆய்வு எடுத்துரைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த செய்தித் தொகுப்பில் அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கத் தேசிய மனநல நிறுவனத்தில் மனிதப் பண்புகள் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளராக பணியாற்றிய பேராசிரியர் டாக்டர். ஜான் பி.கால்ஹவுன், கடந்த 1968-ம் ஆண்டு மனிதக் குலத்தின் எதிர்காலம் குறித்த ஒரு புரட்சிகரமான ஆய்வை மேற்கொண்டார். வெறும் எலிகளை வைத்து நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள், எதிர்காலத்தில் நடக்கவுள்ள அதிர்ச்சியூட்டும் விளைவுகளை எடுத்துரைத்தன. ஆம், மனிதக் குலம் எப்போது வேண்டுமானாலும் அழிந்துபோக நேரிடலாம் என்பதையே அந்த ஆய்வு மேற்கோளிட்டு காட்டியது.
பேராசிரியர் டாக்டர். கால்ஹவுன் தலைமையில் UNIVERSE – 25 என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த ஆய்வு, எலிகளின் இறப்பைத் தடுக்கும் சூழலை உருவாக்குவதாக இருந்தது. இந்த ஆய்வுக்காக நல்ல உடல் ஆரோக்கியமுள்ள 4 ஆண் மற்றும் 4 பெண் என 8 ஆல்பினோ எலிகள் பயன்படுத்தப்பட்டன.
அவற்றுக்குப் பிற விலங்குகளால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் பொருட்டு, சுமார் 4.6 அடி நீளமுள்ள சீல் செய்யப்பட்ட சதுரப் பெட்டியை உருவாக்கி, அதனுள் எலிகளை அடைத்தனர். கண்ணி சுரங்கங்களால் இணைக்கப்பட்ட 256 கூடுகள் அடங்கிய அந்த பெட்டி, எலிகளுக்கான சொர்க்கம் எனக் கூறும் அளவுக்கு அளவற்ற உணவு, தண்ணீர், கூடு கட்டும் பொருட்கள், சீரான தட்ப வெப்ப நிலை ஆகியவற்றைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின் முதல் குட்டிகள் பிறந்தன. அதன் பின் ஒவ்வொரு 55 நாட்களுக்கு எலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. ஆய்வை தொடங்கிய 19-வது மாதத்தில் பெட்டிக்குள் இருந்த எலிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆக உயர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய பெட்டியின் சுற்றுச்சூழல், 3 ஆயிரத்து 800 முதல் 4 ஆயிரம் எலிகள் வரை வாழ போதுமானதாக இருந்தது. இருந்தபோதிலும் எலிகளின் அடர்த்தி அதிகரிப்பால் அவற்றின் இனப்பெருக்கம் குறையத் தொடங்கி சமூக சீர்குலைவு ஏற்பட்டது.
ஆதிக்கம் செலுத்தி வந்த ஆண் எலிகள் பெண் எலிகளை பாதுகாப்பதை விடுத்து அதன் குட்டிகளையே தாக்கத் தொடங்கின. பெண் எலிகள் பாலூட்டுவதை நிறுத்தி குட்டிகளைக் கைவிட்டதுடன், அவற்றை ஆக்கிரோஷமாக தாக்கின. ஆதிக்கம் செலுத்த முடியாமல் தவித்த கைவிடப்பட்ட இளம் எலிகள், பெரும்பாலும் பெட்டியின் மையத்தில் குவிந்து ஒன்றையொன்று தாக்கி வன்முறைகளில் ஈடுபட்டன. பெட்டிக்குள் அசாதாரண சூழல் தீவிரமடைந்த நிலையில், பெண் எலிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அதே நேரத்தில், கூட்டத்தில் இருந்த சில ஆரோக்கியமான ஆண் எலிகள், இனச்சேர்க்கை மற்றும் சமூக தொடர்பைத் தவிர்த்துச் சாப்பிடுவது, உறங்குவது என தங்கள் நாட்களை மந்தமாகக் கழித்தன.
இதனை தீவிர கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சமூக பண்பின் சரிவு என விவரித்த பேராசிரியர் டாக்டர்.கால்ஹவுன், இந்த நிலையை “BEHAVIOURAL SINK” எனக் குறிப்பிட்டார். எலிகளின் தொடர் எதிர்மறை நடத்தைகளால், ஆய்வு தொடங்கிய சுமார் 600 நாட்களில் பிறப்பு விகிதம் முற்றிலுமாக நின்றது. எலிகளின் எண்ணிக்கை விரைவாக அழிவை நோக்கிச் சென்றது. இதன் விளைவாகக் கடந்த 1970-ம் ஆண்டின் முற்பகுதியில் UNIVERSE – 25-ல் இருந்த அனைத்து எலிகளும் உயிரிழந்தன. மனிதக் குலத்தை ஒப்பிட்டு எலிகள் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, சமூக சீர்குலைவின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மனிதர்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.