தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விடுமுறை தினத்தையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, ஏற்காடு அடிவாரம் தொடங்கி, பதினாறாவது கொண்டை ஊசி வளைவு வரையிலான 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏகப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதற்கிடையே, விஐபி-க்களின் வாகனங்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது சுற்றுலாப் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.