மதுரை மேலூர் அருகே பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்த காரணத்தால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் தன்னை விட 3 வயது அதிகமான பெண்ணை காதலித்தார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் தங்கள் வீட்டில் நகைகள் காணவில்லை என பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காதல் ஜோடி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரையும் காரை வைத்து இடித்த கும்பல், சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சதீஷ்குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வரும் நிலையில், சதீஷ்குமாரை பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.