ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்து போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிறுவனர் ஜெயம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறை காலங்களில் முறையான வரி செலுத்தி இயக்கினாலும் போக்குவரத்து அதிகாரிகள் வழிப்பறி போன்று வாகனங்களை நிறுத்துகிறார்கள் என்றும், ஒரு டோல்கேட்டில் 1 மணி நேரம் மேலாக காக்க வைக்கின்றனர் என்றும் சாடினார்.
இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அதிகாரிகள் வரும் போது நடைமுறைகள் தெரியாமல் செக்கிங் ஆர்டர் போடுகிறார்கள் என்றும், வெளி மாநிலத்திற்கு செல்லும் போது அதற்கான வரிகளையும் கட்டியுள்ளோம் என்றும், ஆனால்டி அதிகாரிகள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் சாடினார்.
RTO கட்டண விலையை நிர்ணயிப்பதில்லை என்றும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்காமல் அதிக கட்டணம் என கூறி அபராதம் விதிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வார நாட்களில் குறைந்த கட்டணத்தில் பேருந்தை இயக்குவதாகவும், அடுத்தக்கட்டமாக போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில் பண்டிகை கால விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல 3 மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்துகளை தவிர்த்து அரசு மற்றும் ரயில்களை நாடி வருகின்றனர்.