இண்டியா கூட்டணியின் தமிழக எம்.பி.க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும். இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும்.
ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.