டிரம்புடானான அலஸ்கா சந்திப்புக்கு புதினுடன் சென்ற மெய்க்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேசுடன் சென்ற சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் உலகில் மிக அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பல அடுக்குகள், பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் விசேஷ படைத்துறை அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.
அமெரிக்காவின் SECRETE SERVICE போன்று, ரஷ்யாவில் FEDERAL PROTECTIVE SERVICE என்கிற சிறப்புப் பிரிவு, புதினை பாதுகாக்கும் பிரதான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 30 பேர் வரையில், எப்போதும் புதின் அருகிலேயே மெய்க்காப்பாளர்களாக நின்று அவரை இரவு பகலாகப் பாதுகாக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிறப்புப் பிரிவை, அந்நாட்டின் வேறு எந்த அதிகார அமைப்பாலும் கட்டுப்படுத்த இயலாது.
வெளிப்படையாகக் காட்சியளிக்கும் மெய்க்காப்பாளர்களைத் தாண்டி மறைமுகமாக இருந்தும் பலர் அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த சிறப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் உயர்நிலை தாக்குதல் தடுப்பு பயிற்சி பெற்றவர்கள் எனவும், HAND TO HAND COMBAT , துப்பாக்கி சுடும் திறன் மற்றும் நுண்ணறிவு கண்காணிப்பு போன்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர, 1000 கிலோ TNT வெடிபொருட்களைக் கூட தாங்கும் திறனுள்ள பிரத்தியேக பயண வாகனம், சாப்பிடும் உணவுகளை முன்கூட்டியே பரிசோதிக்க பிரத்தியேக உணவு சுவைப்பாளர், முழு எலக்ட்ரானிக் பாதுகாப்புடன் அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட தனி விமானம், தனிப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவையும் அதிபர் புதினின் பாதுகாப்பு அம்சங்களுள் அடங்கும்.
மொத்தத்தில் அதிபர் புதின் மீதான கொலை முயற்சி, விஷத் தாக்குதல், ட்ரோன் அல்லது ஏவுகணை தாக்குதல் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு மிக கடினமான பாதுகாப்பு வளையத்தினுள் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினின் வெளிநாட்டுப் பயணங்களில் கூட உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்து நிற்காமல், புதினின் சொந்த பாதுகாப்புக் குழுவே முன்னிலை வகிக்குமாம். அண்மையில் அலாஸ்காவில் நடந்த அதிபர் டிரம்புடனான சந்திப்பின்போது, அதிபர் புதினின் மெய்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேஸை சுமந்து சென்றது பல்வேறு செய்தி ஊடகங்களில் பேசுபொருளானது.
இந்நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒருவரின் மலக்கழிவு அல்லது சிறுநீர் மாதிரிகளில் இருந்து அவரது உடல்நிலை, ஹார்மோன் சமநிலை, நோய் மற்றும் மருந்து பயன்பாடு போன்ற பல தகவல்களை கண்டறிய முடியும். ஆக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களோ, பிற அமைப்புகளோ புதினின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதைத் தடுக்கவே அவரது மெய்க்காப்பாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அவரது மலம் மற்றும் சிறுநீர் கழிவுகள் பிரத்தியேக பைகளில் சேமிக்கப்பட்டு, அதற்குரிய பெரிய ரக சூட்கேஸில் அடைக்கப்பட்டு ரஷ்யாவிற்குக் கொண்டு செல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதினை தவிர ஸ்டாலின், கிம் ஜாங் உன் போன்ற குறிப்பிட்ட சில தலைவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாக வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.