ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் இடையே கடந்த வாரம் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட அதிபர் புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது, மேலும் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் நாட்களில் நமது தொடர்ச்சியான பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.