வேற்றுக்கிரக விண்கலம் ஒன்று விரைவில் பூமியை நெருங்கக்கூடும் என ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது சாத்தியம் தானா? இயல்பிலிருந்து மாறுபட்ட இந்த நம்பிக்கைக்கு என்ன காரணம்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
பிரம்மாண்டமான விண்வெளி எப்போதும் நமது கற்பனைகளுக்கு விருந்தளிக்கக் கூடியதே. இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா என்ற கேள்வி, பல நூற்றாண்டுகளாகத் தத்துவவாதிகளையும், விஞ்ஞானிகளையும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டி வருகின்றன. இந்த சூழலில், பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் ஒரு மர்மப் பொருள் வேற்று கிரகவாசிகள் தொடர்பான விவாதங்களை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.
இந்நிலையில், பூமியை நோக்கி மிகுந்த வேகத்தில் வந்துகொண்டிருக்கும் அந்த மர்மப் பொருளை வைத்து, அது வேற்று கிரக வாசிகளின் விண்கலமாக இருக்கலாம் என ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணர் அவி லோப் தலைமையிலான 3 விஞ்ஞானிகள், இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
“31/ATLAS” என்று அழைக்கப்படும் இந்த மர்மப் பொருள், வேற்று கிரக வாசிகளின் ET விண்கலமாக இருக்கலாம் என்றும், அது பூமியை நோக்கி புலனாய்வு சோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வு கலன்களை அனுப்ப வாய்ப்பு இருப்பதாகவும் வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
12 மைல் அகலம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள், மணிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியக் குடும்பத்தைக் கடந்து வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் டிசம்பர் 19-ம் தேதி இந்த மர்மப் பொருள் பூமியில் இருந்து 1.7 கோடி மைல் தொலைவில் செல்லும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். சாதாரண விண்கல்லைக் காட்டிலும் இந்த மர்மப் பொருள் மிகப் பெரியதாக இருப்பதும், சூரியக் குடும்பத்தினுள் அதி வேகமாக நுழைந்த முதல் பொருள் இது என்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வு கலன்களை அனுப்பச் சரியான பாதையாகக் கருதப்படும் விண்மீன் மண்டல மையப்பகுதியில் இருந்து, இந்த மர்மப் பொருள் சூரியக் குடும்பத்தினுள் நுழைந்திருப்பதும் விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த பாதையில் பயணிப்பதால் இது அவ்வப்போது சூரியனால் மறைக்கப்படும் என்பதால், இந்த மர்மப் பொருளை வெறும் கண்ணால் காண இயலாது என்றும் ஆய்வுக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த மர்மப் பொருள் வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அருகில் செல்லும் பாதையும், திட்டமிடப்பட்ட MAPPING MISSION போன்று தெரிவதாகக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இயற்கையாக இப்படி நடப்பதற்குச் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதையும் விவரித்துள்ளனர்.
இந்த மர்மப் பொருள் பூமிக்கு அருகில் வரும் டிசம்பர் 19-ம் தேதியும் அது சூரியனால் மறைக்கப்படும் என்பதால், அதனைப் பூமியில் இருந்து வெறும் கண்ணால் காண இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான நிக் போப்பும், ஹார்வேர்டு விஞ்ஞானிகளின் கூற்று உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். பிற விஞ்ஞானிகள் இதனை வெறும் விண்கல்லாக இருக்கும் என விவாதிப்பதையும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோ பூமியை நோக்கி வருவது வேற்று கிரக விண்கலமா அல்லது விண்கல்லா என்பதைக் காலம் தெளிவுபடுத்தும் என நம்புவோம்.