சீன அமைச்சர் வாங் யீ வருகைக்குப் பின் தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்த சீன அமைச்சர் வாங் யீ, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, இது குறித்து செய்தி வெளியிட்ட சீன ஊடகங்கள், தைவானை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா கருதுகிறது என்பதை ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தது.
இந்தியா, தைவானை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும் தைவானுடன் பொருளாதார ரீதியில் உறவு கொண்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இப்படியான வதந்திகள் பரவத் தொடங்கியதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
அதனால், உலகின் பிற பகுதிகளைப் போலவே, இந்தியாவும் தைவானுடன் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ரீதியாக உறவு கொண்டுள்ளது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.