அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து இருநாட்டு எல்லை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பிறகு, செவ்வாய்க் கிழமை மாலை பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான அழைப்பிதழைப் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
சீனாவின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதாகவும் வாங் யீயிடம் உறுதியளித்தார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த ஆண்டு சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்ததில் இருந்து இந்தியா-சீனா இடையிலான உறவுகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாடுகள் இடையிலான உறவு, உலகளாவிய அமைதிக்குப் பங்களிப்பை வழங்கும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.