தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில், பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல், பேகம்பூர் பூச்சி நாயக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்துல்லா வீட்டில் தேசியப் புலனாய்வு முகமையின் டிஎஸ்பி சுதர்சன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் செல்போன்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடையாள அட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.மேலும் வரும் 25 ஆம் தேதி என்.ஐ.ஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் யூசிப் என்பவரது இல்லத்திலும், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலையரங்கம் பகுதியில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடை உள்ளிட்ட 5 இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் செல்போன் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் புதுமனை தெற்கு தெரு பகுதியில் வசித்து வரும் முகமது அலி என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிலிருந்தவர் எனக் கூறப்படுகிறது.