சென்னை ஜாபர்கான்பேட்டை அருகே பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜாபர்கான் பேட்டை VSM கார்டன் தெருவில் வசித்து வந்த கருணாகரன் என்பவர் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இவர் குடியிருந்த தெருவில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், கடைசியாக உள்ள வீட்டில் கருணாகரன் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
தெருவில் உள்ள 2வது வீட்டில் பூங்கொடி என்பவர் பிட்புல் ரக நாயை வளர்த்து வரும் நிலையில், பூங்கொடி வீட்டைக் கடந்து சென்றபோது கருணாகரனை பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் கருணாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற நாயின் உரிமையாளர் பூங்கொடியையும் நாய் கடித்துள்ளது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் கருணாகரனின் சடலத்தைக் கைப்பற்றி கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் பிட்புல் ரக நாயை வலையை வைத்துப் பிடித்தனர். விதிகளை மீறி பிட்புல் ரக நாயை உரிமையாளர் வளர்த்து வந்ததாகவும், புகார் அளித்தும் உரிமையாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சட்டவிரோதமாக பிட்புல் ரக நாயை வளர்த்து வந்த உரிமையாளர் பூங்கொடி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக நாய் வளர்த்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.