மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் தவறான தரவுகளை வழங்கியதாகத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தொலைக்காட்சி நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியான மகாதேவபுரா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டினார்.
மேலும், மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலிலும் மோசடி நிகழ்ந்திருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு ஆதாரமாக சிஎஸ்டிஎஸ் எனப்படும் வளர்ந்து வரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையத்தின் தலைவரான தேர்தல் ஆய்வாளர் சஞ்சய்குமார் வெளியிட்டிருந்த புள்ளி விபரங்களையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட புள்ளி விபரங்கள் அனைத்தும் பிழையானவை எனத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
பிழையான புள்ளி விபரங்களை வெளியிட்டதற்காகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சஞ்சய்குமார் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி நேரலையில் சஞ்சய்குமார் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.