காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதும், தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதிது புதிதாக ராகுல்காந்தி அரங்கேற்றும் நாடகங்கள் ஒவ்வொருமுறையும் அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது. வழக்கமான ஜனநாயக நடைமுறையைக் கூட அறிந்திருக்காமல் மூர்க்கத் தனமாக ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் குறித்தும் அதன் உண்மை நிலவரம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2014 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத காங்கிரஸ், பாஜக வெற்றி பெறும் இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்ற குற்றச்சாட்டை எழுப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திர குற்றச்சாட்டு எடுபடாத நிலையில், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் ஓட்டுத் திருட்டு நடைபெறுவதாக புதிய பிரச்சாரத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையிலான காலகட்டத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் நடைமுறை வழக்கமானது என்பதைக் கூட தெரிந்திருக்காத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் 4 சதவிகிதம் வாக்குகள் எப்படி அதிகரிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதே மகாராஷ்டிராவில் கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போதும் இதே 4 சதவிகிதம் வாக்காளர்கள் அதிகரித்திருந்ததைக் கண்டு கொள்ளாத காங்கிரஸ் தற்போது பாஜக வெற்றி பெற்ற போது மட்டும் புகார்களை எழுப்புவது உள்நோக்கம் கொண்டது என்பதை வெளிப்படுத்துகிறது.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானபோதோ, அதற்கும் சில மாதங்கள் கழித்தோ எந்தவித புகாரையும் அளிக்காத காங்கிரஸ், எட்டு மாதங்கள் கழித்துத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல்காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகள் சர்ச்சையானது என்பதோடு மட்டுமல்லாமல் ஆபத்தானதும் கூட என்ற விவாதம் எழத் தொடங்கியுள்ளது. உண்மைகளை மறைப்பதோடு, சட்டத்தையும் தவறாகச் சித்தரிக்கப் பார்க்கும் ராகுல்காந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிராவை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தானே வாக்காளர் தயாரிக்கப்பட்டது என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய அம்மாநில அமைச்சர் ராஜண்ணா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை வழங்குங்கள், இல்லையெனில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடுங்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் ராகுல்காந்தி பதற்றமடைந்துள்ளார். காங்கிரஸ் தோல்வி பெறும் போதெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடு, ஓட்டுத் திருட்டு எனும் புதுப்புது பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ராகுல் காந்தி, அதே காங்கிரஸ் வெற்றி பெற்றால் மவுனம் காப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தும் பணி குறித்து தற்போதுவரை காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்காத நிலையில், தோல்வி பயத்தில் புதுப்புது குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி எழுப்பி வருகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கும் ராகுல்காந்திக்கு, அடுத்தடுத்த மாநிலங்களில் நடைபெறும் திருத்தப் பணிகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.