அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலி பிரதமரின் அழகை வர்ணித்து மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..
பெண்கள் குறித்து ஏதாவது கருத்தைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது இளம்பெண் உள்ளார். அண்மையில் அவர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கரோலின் லீவிட் பிரபலமான ஒருவராக மாறிவிட்டதாகவும், அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது எனவும் கூறினார். மேலும், கரோலின் லீவிட்டின் அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திரத் துப்பாக்கி போல் உள்ளதாகவும் வர்ணித்திருந்தார்.
தன்னை விட ஐம்பது வயது குறைந்த ஒரு பெண்ணை ட்ரம்ப் இப்படி வெளிப்படையாக வர்ணித்துப் பேசியது கண்டனத்தைப் பெற்றது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் அடுத்த சர்ச்சையில் ட்ரம்ப் தற்போது சிக்கிக்கொண்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான உயர்மட்ட கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
அந்த கூட்டத்தில் ட்ரம்புக்கு அருகே இத்தாலி பிரதமரான மெலோனி அமர்ந்திருந்தார். அப்போது, மெலோனி பக்கம் திரும்பிய ட்ரம்ப், நீங்கள் மிகவும் அருமையாக இருக்கிறீர்கள் எனப் புகழ்ந்தார். ட்ரம்ப்புடைய போதாத நேரம். மைக் ஆனிலேயே இருந்தது. அவருடைய புகழ் மொழிகளை உலகமே கேட்டுவிட்டது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அந்த போரை நிறுத்துவதற்கு ஒரு கூட்டத்தைக் கூட்டினால், அங்கும் சென்று ட்ரம்ப் வழிந்து கொண்டிருப்பதாகப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
1984ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ரொனால்ட் ரீகன், ரேடியோவில் உரையாற்ற இருந்தார். அப்போது மைக்கை செக் செய்வதற்காக பேசிய அவர், இன்னும் ஐந்து நிமிடங்களில் ரஷ்யா மீது குண்டு வீசப்போகிறோம் எனக் கூறினார். நகைச்சுவையாக அவர் கூறியபோதும், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், 2010 ஆண்டு ஒபாமா கொண்டு வந்த ஒபாமா கேர் என்ற மருத்துவ திட்டத்தை ஜோ பைடன், மைக் முன்னால் விமர்சித்துச் சிக்கிக்கொண்டார். இப்படி மைக் ஆனில் உள்ளதை அறியாமல் பேசி மாட்டிக்கொண்ட பல தலைவர்கள் உள்ளனர். ஆனால், பெண் பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஒரே தலைவர் ட்ரம்ப்தான்.