ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு அமெரிக்கா இதுவரை அதிகப்படியான வரி எதுவும் விதிக்கவில்லை. இதற்கு அமெரிக்கா கூறும் காரணம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீதம் வரி வித்துள்ளார். ரஷ்யாவுடனான வர்த்தக உறவுதான் உண்மையிலேயே பிரச்சனை என்றால், சீனாவுக்குத்தான் அவர் அதிக வரி விதித்திருக்க வேண்டும். காரணம், இந்தியாவைக் காட்டிலும் சீனாதான் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கி வருகிறது.
ஆனால், சீனா மீது தொடர்ந்து கரிசனத்துடன் நடந்து வரும் ட்ரம்ப், இந்தியாவுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து வாள் சுழற்றி வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதுதான் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறும் விளக்கங்கள் தெளிவை ஏற்படுத்தாமல், குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
அண்மையில் பேட்டியளித்த அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதனை இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்வதாகக் கூறினார். இதன் மூலம் இந்தியா ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டுவதாகவும், இந்தியாவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
அதாவது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, அதனை வேறு இடங்களில் இந்தியா விற்பதுதான் அமெரிக்காவுக்கு பிரச்சனை எனக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகிறார். ஆனால், இதனையேதான் சீனாவும் செய்து வருகிறது. இருந்தபோதிலும் சீனா மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யைச் சீனா சுத்திகரித்து ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், சீனாவுக்கு அதிக வரி விதித்தால் ஐரோப்பிய நாடுகளை அந்த வரி விதிப்பு பாதிக்கும் எனவும் தெரிவித்தார். இதனால்தான், சீனாவுக்கு அதிக வரி விதிக்கப்படவில்லை என, ஒரு வினோதமான விளக்கத்தை அவர் அளித்தார்.
இது ஏற்கனவே உள்ள குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. சீனாவும், இந்தியாவும் ஒரே செயலைதான் செய்கின்றன. அப்படியென்றால் இருநாடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும். வரி விதிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் இரு நாடுகளுக்கும் வரி விதிக்கக் கூடாது. மாறாக, சீனாவுக்கு ஒரு நியாயத்தையும், இந்தியாவுக்கு ஒரு நியாயத்தையும் அமெரிக்கா கூறி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை, முந்தைய பைடன் அரசு ஊக்குவித்தது. அதனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவு சுமுகமாக இருந்து வந்தது. ஆனால், அந்த சுமுக உறவை சீர்கெடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் ட்ரம்ப் அரசு தற்போது செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.