சாமானியர்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாமானியர்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
எளிமைப்படுத்தப்பட்ட, வெளிப்படையான மற்றும் வளர்ச்சி சார்ந்த வரி ஆட்சியை உறுதி செய்வதோடு, தற்சார்பு நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.
கட்டமைப்பு சீர்திருத்தங்கள், விகித பகுத்தறிவு மற்றும் வாழ்க்கை எளிமை ஆகிய மூன்று தூண்களை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் வகையில் மாநில அரசுகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.