மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூலை மாதம் தனிப்படை காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அஜித்குமார் கொலை வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கின் 6வது குற்றவாளியாகக் காவல் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நகை காணாமல் போனதாகப் புகாரளித்த நிகிதாவிடம் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள் அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற கிளை முழுமையாகக் கண்காணிக்கும் என்றும் சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.