தவெக மாநாட்டு திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரவில் இருந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டு திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்ந்துள்ளது. அத்துடன் மாநாட்டு திடலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் உணவுக்காக தொண்டர்கள் முண்டியடித்தனர்.
இதனிடையே மாநாட்டிற்கு தங்களது வாகனங்களை அனுமதிக்குமாறு கப்பலூர் சுங்கச்சாவடி அருகே போலீசாருடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொண்டர்களுக்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.