மதுரை பாரபத்தி பகுதியில் நடந்த த.வெ.க. மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள், விஜய் பேசுவதற்கு முன்பாகவே கடும் பசியின் காரணமாக மாநாட்டு திடலை விட்டு வெளியேறினர்.
பாரபத்தி பகுதியில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலுக்கு 10 மணி முதலே வருகை தந்த தொண்டர்கள் கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் திணறினர். இதன் காரணமாக அங்கிருந்த தரை விரிப்புகளை கிழித்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பினர்.
இதேபோல் மாநாட்டு திடலில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், பசியால் பலரும் வாடினர். மாநாட்டு திடல் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடைகள் இருந்ததால், பலரும் கொளுத்தும் வெயிலில் நடந்தே கடைகளை நோக்கி படையெடுத்தனர். ஆனால், அங்கு இணைய சேவை போதிய அளவு இல்லாத காரணத்தால், கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமல் த.வெ.க. தொண்டர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
மாநாடு நடைபெற்ற பகுதிக்கு பிற்பகல் மூன்றரை மணிக்கு மேல் வருகை தந்த விஜய், மேடையில் இருந்தவர்களை வரவேற்று விட்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த Ramp-ல் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசத் தொடங்கியதால், பசியில் வாடிய த.வெ.க. தொண்டர்கள் மாநாட்டு திடலில் இருந்து உணவைத் தேடி வெளியேறினர்.
மாலை நான்கரை மணிக்கு மேல் மாநாட்டு மேடை அருகே கட்சிக் கொடியை ஏற்றி வைத்த விஜய், கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு பேசத் தொடங்கினர்.
அப்போது, திமுகவை கொள்கை எதிரி என்று அறிவித்த விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று குறிப்பிட்டு, ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே த.வெ.க.-வின் இலக்கு என்றும் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.