பாகிஸ்தானில் இணைய சேவை முடங்கியதால் வணிகங்கள், நிதி சேவைகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஃபைபர் வழித்தடங்கள் சேதமடைந்து இணைய சேவை முடங்கியது. இந்நிலையில் அந்நாட்டில் மீண்டும் இணைய சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள், வணிகங்கள் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய பாகிஸ்தானின் இணைய சேவை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஷாஜாத் அர்ஷத், பாகிஸ்தானுக்கு இது ஒரு தேசிய தோல்வி என விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் என்பது அரிதான நிகழ்வாக இல்லை என குறிப்பிட்ட அவர், இது மீண்டும் மீண்டும் நிகழ்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
2022 இல் இணைய சேவை முடங்கிய அதே தேதியில் தற்போது மீண்டும் செயலிழப்பது அரசாங்கத்திற்கு எச்சரிக்கை மணி என அவர் கூறியுள்ளார். மேலும் இது சர்வதேச நம்பகத் தன்மையை சேதப்படுத்தி பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான இழப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஷாஜாத் அர்ஷத் எச்சரித்துள்ளார்.