அணு ஆயுதங்களை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஏந்திச் சென்று தாக்கும், அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்த வெற்றி உலகளவில் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
உலகில் அதிக மக்கள் தொகைகொண்ட நாடுகளான இந்தியாவும், சீனாவும் தெற்காசியா முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த போட்டியிடும் தீவிர போட்டியாளர்களாக உருவெடுத்துள்ளனர். சீனாவிற்கு எதிரானவர்களாக கருதப்படும் குவாட் பாதுகாப்பு கூட்டமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. 2020-ல் நடந்த கடும் எல்லை மோதலுக்கு பின், இரு நாடுகளின் உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே அண்மை காலமாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் உச்சம் தொட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது, அமெரிக்காவுடனான உறவிலும் இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தற்போது இந்தியாவும், சீனாவும் தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளி வர்த்தக ரீதியாக ஒன்றிணைய பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகவே இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, 2018-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக பிரதமர் மோடி சீனா செல்லவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தற்போது, ஒடிசா மாநிலம், சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து, அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது.
STRATEGIC FORCE COMMAND கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை அனைத்து தொழில்நுட்பங்களையும், செயல்பாட்டு அளவுகோள்களையும் முழுமையாக நிறைவேற்றியிருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதமும் அக்னி-5 சோதனையை இந்தியா நடத்தியிருந்தது. பாகிஸ்தானுடன் நடந்த ராணுவ மோதலுக்கு பின் சுமார் மூன்றரை மாதங்களில், இந்தியா மீண்டும் இந்த சோதனையை நடத்தியிருக்கிறது.
இது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் எதிராக இந்தியாவின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அக்னி-5 ஏவுகணையின் 5 ஆயிரம் கிலோ மீட்டர் திறன் வட சீனாவையும், ஆசியாவின் பெரும்பகுதியையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் இந்தியாவிற்கு விரிவான மூலோபாய பாதுகாப்பை வழங்குகிறது.
மூன்று நிலை திட எரிபொருள் ராக்கெட் இயந்திரத்துடன் கூடிய அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல், மேம்பட்ட வழிகாட்டி அமைப்புகளின் உதவியால் மிகவும் துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான அக்னி தொடரின் ஏவுகணைகள், 700 கிலோ மீட்டர் முதல் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறனை கொண்டவை. இது தவிர 500 முதல் 1000 கிலோ மீட்டர் தூரம் வரை வெடி பொருட்களை ஏந்திச் சென்று தாக்கும், பிரித்வி-2, புதிய டேக்டிகல் ஏவுகணையான பிரளய் ஆகிய ஏவுகணைகளும் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையின் சோதனையும் வெற்றிபெற்றுள்ளது. இது ஆசியாவின் சக்தி சமநிலையை அசைத்துப் பார்க்கும் திறன் கொண்டதாக விளங்கும் எனவும், இதன் மூலம் நாட்டின் நீண்ட தூர தாக்குதல் திறனையும், அணு தடுப்பு வலிமையையும் இந்தியா உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது என புவிசார் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.