சென்னை கண்ணகி நகரில் மழைநீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.
கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர், மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். அவர் இன்று அதிகாலை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது கனமழை காரணமாக அங்குள்ள மின் கம்பி, தேங்கி இருந்த மழை நீரில் அறுந்து விழுந்தது. இதனை அறியாத வரலட்சுமி, மழைநீரில் இறங்கியுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த பகுதியில் மின் கேபிள்கள் சேதமடைந்திருப்பது பற்றி பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகவும், எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.