2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவிகிதம் எத்தனாலை கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே அடைந்துவிட்டது. அடுத்த இலக்காக 100 சதவிகித பயோ-எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துமாறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. காரணம் என்ன? விரிவாக அலசலாம்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை., பெட்ரோல், டீசல் பயன்பாட்டையும் அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்தியாவில் 40 சதவிகித மாசு, வாகன பயன்பாட்டால்தான் ஏற்படுகிறது என்கிறது ஆய்வு….. குறிப்பாக டெல்லியில் காற்று மாசு என்பது பெரிய தலைவலியாகவே மாறிவிட்டது.
எரிபொருளால் வெளிப்படும் கார்பன் அளவை குறைக்க மத்திய அரசு எத்தனால் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. பெட்ரோல் உடன் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு என்ற கொள்கை இலக்கை, இந்தியா முன்கூட்டியே எட்டிய நிலையில், வாகனங்களில் 100 சதவிகித எத்தனால் பயன்பாடு என்ற அடுத்த இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
சுத்தமான பெட்ரோலை விட விலை மலிவான எத்தனால் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை அகற்றுவதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கிறது. இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…
அண்மையில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எதிர்காலத்தில் FLEX-FUEL வாகனங்களை உற்பத்தி செய்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இயற்கை எரிவாயு, எத்தனால் அல்லது குறைந்த அளவிலான கார்பன் உமிழ்வு கொண்ட எரிபொருள் பற்றி பேசிய நிதின் கட்கரி, பிரேசிலின் JOHN DEERE நிறுவனத்தின் டிராக்டர் முற்றிலும் பயோ – எத்தனாலை கொண்டு இயக்கப்படுவதை கோடிட்டு காட்டினார்.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், மாருதி சுசுகி, டாடா நிறுவனங்கள் ஃபிளெக்ஸ்-ஃபியூல் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டதாக குறிப்பிட்ட அவர், பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் ஃபிளெக்ஸ்-ஃபியூல் இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார்ஸ், உலகிலேயே முதல்முறையாக 100 சதவிகிதம் எத்தனாலை கொண்டு இயங்கும் Electrified Flex-Fuel Innova Hycross காரை கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்திதையும் நிதின் கட்கரி நினைவு கூர்ந்தார். அதேநேரத்தில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகன என்ஜின்கள் பழுதடைவதாக வெளியான தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக அனைத்து மட்டத்திலும் ஆய்வு செய்த பின்னரே பெட்ரோல் உடன் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.
FLEX-FUEL வாகனங்கள், பெட்ரோல், எத்தனால் அல்லது சுத்திகரிக்கப்பட்ட எத்தனால் என பலதரப்பட்ட எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் திறன் கொண்டவை. சென்சார் உதவியுடன் எரிபொருள் என்னவென்று கண்டறிந்து, அதற்கேற்ப செயல்படும் வகையில், ஃபிளெக்ஸ்-ஃபியூல் வாகனங்களின் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக FLEX-FUEL தூய்மையானது என்பதோடு, பெட்ரோலுடன் ஒப்பிடும்போது குறைவான நச்சு புகையை வெளியிடுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுத்தமான பெட்ரோலை விட விலை மலிவான எத்தனால் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை அகற்றுவதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகனங்களை இந்தியாவில் கொண்டுவர மத்திய அரசு அதிகம் விரும்புகிறது. அதற்காகவே மின்சார வாகனங்களுக்கு வரி சலுகைகளை அளித்து வரும் மத்திய அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஃபிளெகஸ் – பியூல் வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.