இரண்டாவது உலகப்போருக்கு பிறகு இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் வலிமையாக இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்ய அதிபர் புதின் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வர உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக ரஷ்யா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் புதினிடம், உக்ரைன் போர் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததாகவும், துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் பற்றியும் தெரிவித்ததாகவும் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் உடனான வர்த்தக மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு லாவ்ரோவ் உடனான தனது சந்திப்பு அரசியல் உறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு இரண்டையும் மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் முக்கிய உறவுகளில் ஒன்றாக இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு நிலையானதாக உள்ளதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த உறவு மேம்படுவதற்கு வசதியாக, தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை, மாறிவரும் பொருளாதார மற்றும் வர்த்தக சூழல் அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறிய ஜெய்சங்கர், சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தான், ரஷ்ய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை அதிகம் கொள்முதல் செய்கின்றன என்று விளக்கமளித்தார்.
பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எதிர்த்து ஒன்றாக போராட இருநாடுகளும் முடிவு செய்திருப்பதாகவும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும் குறிப்பாக, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உறுதி எடுத்திருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாக கூறிய ஜெய்சங்கர், பிரிக்ஸ் ,ஜி-20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருநாடுகளின் ஒத்துழைப்பு வலுவானதாகவும், எதிர்கால இலக்குகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்துக்கு இணைந்து செயலாற்ற இருநாடுகளும் உறுதியேற்றுள்ளன.
வரி அல்லாத தடைகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வது, மருந்துகள், விவசாயம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதியை மேம்படுத்துவது, எரிசக்தி துறையில் ஒன்றிணைந்து செயல்படுவது, என இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.