மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே சென்னை கண்ணகி நகர் பெண் துப்பவுரவு பணியாளர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்பவர் சென்னை மாநகராட்சியில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று அதிகாலை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு தேங்கியிருந்த மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார், வரலசுட்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணகிநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் பல மின்கேபிள்கள் சேதமடைந்து உள்ளதாகவும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரலசுட்மியின் உயிரிழப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணமென குற்றஞ்சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரின் குடும்பத்தாரிடம்
20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் எனவும் , தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.