தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்க வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட, தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் கட்டிடங்களில் இது போல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஊர் ஊராகச் சென்று, தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீண் விளம்பரங்களுக்காக செலவிடவா மக்கள் வரிப்பணம்? தமிழகம் முழுவதும், பள்ளிகளுக்கு முறையான கட்டிடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களும், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளே இடிந்து விழுகின்றன என அவர் கூறியுள்ளார்.
அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி மையங்கள், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உடனடியாக, தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.