உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இளைஞர்கள் அதிகளவில் வாங்கி, இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கன்யா சத்ராலயா திட்டத்தின்கீழ் பெண்கள் விடுதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அப்போது காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, கட்டப்படவுள்ள புதிய விடுதிகள் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், அதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்பவும் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள திறமையான மக்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பும் தேவையும் உள்ளதாகவும், புதிய தேசிய கல்விக் கொள்கை திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டு மக்களும், வர்த்தகர்களும் இந்திய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இளைஞர்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.