இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த அமைப்பு இந்திய படைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியா தனது ராணுவ பலத்தை மென்மேலும் அதிகரித்து வருகிறது.. அண்மையில் மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், 5000 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் வல்லமை கெண்ட அக்னி-5 ரக ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு பாயும் அக்னி-5 ஏவுகணை பாகிஸ்தானை பதற வைத்தது.
இந்த நிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Integrated Air Defence Weapon System எனப்படும் புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் வான் பாதுகாப்பு அமைப்பானது, மிகக் குறுகிய நேரத்திற்குள் அதிவிரைவாகச் சென்று எதிரி ஏவுகணைகள், உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்லது. இதில், Quick Reaction Surface to Air Missile, Very Short Range Air Defence System மற்றும் Directed Energy Weapon ஆகிய மூன்று விதமான ஆயுதங்கள் உள்ளதால், எதிரியின் வான்வழி தாக்குதல்கள் முறியடிக்கப்படுவதோடு, முக்கிய பகுதிகளைப் பாதுகாக்கவும் பயன்படும்.
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்புச் சோதனை, நமது நாட்டுக்குப் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவியுள்ளதாகவும், எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய வான் பாதுகாப்பு திறனைப் பலப்படுத்திய ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை அதிக துல்லியத்துடன் தாக்கி அழித்தது. இந்நிலையில், சுயசார்பில் வடிவமைக்க்பபட்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுவதோடு, பாகிஸ்தான், சீனாவுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.