30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சி காலங்களில் ஒழுக்கமாக இருந்திருந்தால் தொடர்ந்து 3 தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது வேறு எந்த தலைவரோ சிறையில் இருந்து நாட்டை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பிய அமித்ஷா, அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா எனவும் வினவினார்.
130வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பிரதமர், முதலமைச்சர் அல்லது மாநில அரசாங்கத்தின் எந்த தலைவரும் சிறை சென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பீஹாரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுடன் ராகுல் காந்தி நட்பு பாராட்டுவதாக தெரிவித்த அமித்ஷா, இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறாது என உறுதிபட கூறினார்.
மேலும், உடல்நலப் பிரச்னையால் தனிப்பட்ட முறையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என்றும், தமது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு விதிப்படி தன்கர் சிறப்பாக பணியாற்றினார் எனவும் புகழாரம் தெரிவித்தார்.
ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல எனவும் அமித்ஷா கூறினார்.