ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம், இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் செப்டம்பர் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்தக் கூட்டம், கடந்த ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. ஜோத்பூரில் நடைபெறும் கூட்டத்தில் RSS-ன் கீழ் இயங்கும் 32 அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த காரியகர்த்தாக்கள் தங்கள் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குவார்கள்.
சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.