சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிஜி நாட்டு பிரதமர்ச் சிதிவேனி லிகமமடா ரபுகாவை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2014ல் பிஜிக்கு விஜயம் செய்தபோது இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம் உருவாக்கப்பட்டதாகவும், இந்த முயற்சி இந்தியா-பிஜி உறவுகளை மட்டுமல்ல, முழு பசிபிக் பிராந்தியத்துடனான உறவை வலுப்படுத்தியது எனவும் தெரிவித்தார்.
பிஜி பிரதமர் ரபுகாவின் வருகை மூலம், இருநாடுகளின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் சேர்ந்துள்ளதாகவும் கூறினார். பிஜியின் சுவா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்ட இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, டயாலிசிஸ் பிரிவுகள் மற்றும் கடல் ஆம்புலன்ஸ்கள் பிஜிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், காலநிலை மாற்றம் பிஜிக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் பிஜியின் திறன்களை மேம்படுத்த இந்தியா உதவி புரியும் எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிஜி பிரதமர்ச் சிதிவேனி ரபுகா மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்ப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அப்போது, பிஜி பிரதமருக்குக் காந்தியின் மார்பளவு சிலைப் பரிசாக வழங்கப்பட்டது.