சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்திருக்கிறார் இந்திய பேட்ஸ்மேன் செதேஷ்வர்ப் புஜாரா. இந்திய அணியில் இடம்பிடித்துப் புஜாரா செய்த சாதனைகளைச் சற்று திரும்பி பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த 2010ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானவர்தான் ‘THE WALL 2.O’ செதேஷ்வர்ப் புஜாரா.
2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய புஜாரா, 525 பந்துகளில் 202 ரன்கள் விளாசினார். ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 500 பந்துகளுக்கு மேல் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார்.
கடைசியாகக் கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய புஜாராவுக்கு, அதன் பின்னர் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை….
103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 19 சதங்கள், 35 அரைசதங்கள் உடன் 7,195 ரன்கள் குவித்தவர். டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 217 பந்துகளை எதிர்கொண்டுள்ளபுஜாராவின் பேட்டிங் சராசரி 43.61. இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற பெருமையையும் இவரிடம் உள்ளது.
ஆஸ்திரேலியா என்றாலே அடிப்பேன் என்று சொல்லும் அளவுக்கு அந்த அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியவர்புஜாரா… ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 11 அரைசதங்கள் என 2 ஆயிரத்து 74 ரன்களை விளாசியிருக்கிறார்.
தடுப்புமுறை ஆட்டத்திற்குப் பெயர் போன புஜாரா, இக்கட்டான சூழலில் அணியின் மீட்பராக விளையாடும் திறன் படைத்தவர். களத்தில் எதிரணி பவுலர்கள் சிறப்பாக வீசும் பந்தை அறிந்து அதை அப்படியே லீவ் செய்யும் கலையில் கைதேர்ந்தவர்.
முதல் தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களைக் கடந்துள்ள புஜாரா, 18 இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார். புஜாராவின் இந்தச் சாதனையை இந்திய கிரிக்கெட்டில் யாராவது முறியடிக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது.
ஓய்வு அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புஜாரா, இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு,தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு முறைக் களம்காணும் போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்று கூறிய அவர், அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.