கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது கிட்னி திருட்டு விவகாரத்தில் காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது, சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், சிபிசிஐடி-யின் காவல்துறை துணைத் தலைவரே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணைக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு குறிப்பிட்டு வழக்கை சிறிதுநேரம் ஒத்தி வைத்தனர்.
மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரக சுகாதார சேவைகளின் இயக்குனர் புகார் அளித்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய இயலும் என அரசு தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிவதாக குற்றம் சாட்டிய நீதிபதிகள்,
வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து,தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த புலனாய்வு குழு, நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 24-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டனர்.