தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து மத்திய அரசு நல்லாசிரியர் விருதினை வழங்குகிறது.
இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் அடங்கிய பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு உயர்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் PS செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆசிரியை விஜயலட்சுமிக்கு அவரது குடும்பத்தினர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.
இதனிடையே, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த மயிலாப்பூர் PS செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், உங்களின் உயர்ந்த கனவுகளை நோக்கி ஓடினால், விருதுகளும், கவுரமும் உங்களைத் தேடி வரும் எனக் குறிப்பிட்டார்.