உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு கேரள மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்து மதம் பற்றி திமுக தலைவர்கள் அவதூறாக பேசியதை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாதென அவர் தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் சங்கமம் விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்பதற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.