விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆயிரத்து 500 சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சென்னையில் சிலைகளை வைத்து வழிபட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாகவும், தற்போதுவரை ஆயிரத்து 500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என கூறிய சென்னை காவல்துறை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.