விநாயகர்ச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது ஒரே மாதிரியான சட்டைகளை அணியும் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதற்காகச் சேலத்தில் விநாயகர் உருவம் பொறித்த சட்டைகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகைத் தினத்தன்றும், அதனை ஊர்வலமாகக் கரைக்கும் தினத்தன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வலமாகச் சென்று கொண்டாடும் பழக்கம் தமிழகத்தில் நீண்டகாலமாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வாறு ஊர்வலமாகச் செல்லும் போது ஆடிப்பாடுவதோடு, தங்களுக்கெனத் தனி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரே வண்ணத்தில் கூடிய டீசர்ட்களை அணிந்து வருவார்கள். ஆனால் நடப்பாண்டில் சற்று வித்தியாசமாக விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை அணிய தயாராகி வருகின்றனர்
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட சட்டைகள் அணியும் பழக்கம் நடப்பாண்டில் உருவாகியுள்ளது. விநாயகர்ச் சதூர்த்தி தினத்தன்று அணிவதற்காகச் சேலத்தை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் விநாயகர் உருவம் பொறித்த எம்பிராய்டரி சட்டைகளை அதிகளவில் ஆர்டர்க் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆர்டர்கள் அதிகளவு வந்திருப்பதால் சேலத்தில் குகைக் கருங்கல்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், அரியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலைகளில் விநாயகர் உருவம் பொறித்த சட்டைகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை மட்டுமல்லாது மற்ற பண்டிகைகளுக்கும் பல்வேறு வடிவங்களில் மக்கள் விரும்பும் புகைப்படங்களைச் சட்டையில் பொறித்துத் தயாரித்து வழங்க தயாராக இருப்பதாகத் தொழிலாளர்களும், நிறுவன உரிமையாளர்த் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இந்தவருட விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகையின் போது சிலைகள் மட்டுமல்லாது சட்டைகளும் பேசுபொருளாகும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.