விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர்ச் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் விநாயகர்ச் சதூர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் சென்னையில் கொண்டாடப்படும் விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகைத் தனித்துவமிக்கதாக திகழ்கிறது. சென்னையில் வீடுகள் மட்டுமல்லாது தெருக்களில் வைத்து வழிபடும் விநாயகர்ச் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தற்போதே விநாயகர்ச் சதூர்த்திக்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் ஒருபகுதியாகச் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சென்னைக் கொசப்பேட்டையில் களிமண், காகிதக் கூழ் ஆகிய எளிதில் கரையக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளுக்கு நடப்பாண்டு வரவேற்பு அதிகரித்துள்ளது.
மண்ணில் இருந்து சிலையை உருவாக்கி, அதனை உலர வைத்து, பளபளக்கும் வண்ணங்கள் அடித்து, கண்களுக்கு உயிரூட்டும் வரையிலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுணுக்கமான ஆபரணங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், கையால் வடிவமைக்கப்பட்ட முக பாவனைகள் எனத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு சிலைகளையும் தன்னுடைய கைக்குழந்தைகளைப் போல தயாரிப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து விதமான சிலைகளின் விற்பனையும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீரில் எளிதில் கரையக்கூடிய எக்கோ பிரண்ட்லி சிலைகளுக்கே அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கலை, பக்தி, வியாபாரம் ஆகிய மூன்றையும் இணைந்து உருவாக்கும் இந்த விநாயகர்ச் சதூர்த்தி, பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் சிலைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் நகரமயமாதலின் காரணமாக விநாயகர்ச் சிலைகளை தயாரித்துப் பாதுகாப்பதற்கான போதுமான இடவசதி இல்லாத நிலையில், அதற்கெனத் தனி இடத்தை அரசே ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கைச் சிலை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.