தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை உட்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றங்களில் நடக்கும் விதிமீறல்களில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களைப் பாதுகாப்பதாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்தனர்.
மேலும், மனமகிழ் மன்றங்களை முறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி, மதுவிலக்கு ஆணையர், மாநகர்க் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மனமகிழ் மன்றங்களில் ஆய்வு செய்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.