திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட 8 குழந்தைகளுக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல், சளி போன்றநோய்களுக்குப் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இரவு 9 மணி அளவில் மருத்துவர்கள் சோதனைச் செய்த நிலையில், குழந்தைகளுக்குச் செவிலியர் ஊசி செலுத்தியுள்ளார்.
அப்போது, 8க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குழந்தைகள் வார்டில் பதற்றம் நிலவியது. மேலும், குழந்தைகள் வார்டில் போதுமான அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தாமதம் ஏற்பட்டது.