கஞ்சா, மது எல்லாம் விற்கப்படும் தமிழ்நாட்டில், இந்துக்களின் கடவுளான விநாயகர் சிலையை வைக்க அனுமதி இல்லையா? என இந்து அதிரடிப் படையின் நிறுவனத் தலைவர் ஜி.எஸ்.ராஜகுரு கேள்வி எழுப்பினார்.
விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இந்து அதிரடிப் படைச் சார்பில் ஆயிரத்து எட்டு விநாயகர்ச் சிலைகள் வழங்கப்பட்டன.
இந்து அதிரடிப் படையின் நிறுவனத் தலைவர் ஜி.எஸ்.ராஜகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து இயக்கங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.எஸ்.ராஜகுரு, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில் சிலைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், வைத்தால் கைது செய்வோம் எனப் பக்தர்களை அச்சுறுத்துவதாகவும் கூறினார்.